அதிகாரி ராகுல் பட், போலீஸ்காரரை தொடர்ந்து காஷ்மீரில் மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

ஸ்ரீநகர்: அரசு அதிகாரி, போலீஸ்காரரை அடுத்தடுத்த நாளில் சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள், நேற்று பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒருவர் காயமடைந்தார். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக அரசு அதிகாரிகள், போலீசார் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சிறுபான்மையினரான பண்டிட்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த 12ம் தேதி பட்காம் மாவட்டத்தில் சதூரா பகுதி தாசில்தார் அலுவலகத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு பணியாற்றிய அதிகாரியான பண்டிட் பிரிவை சேர்ந்த ராகுல் பட்டை சுட்டுக் கொன்றனர். இதை கண்டித்து அரசு ஊழியர்களும், பண்டிட்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த படுகொலை சம்பவத்துக்கு மறுநாள் புல்வாமா மாவட்டத்தில் உள்ள குதூரா கிராமத்தில் வீட்டிற்குள் புகுந்த தீவிரவாதிகள், போலீஸ்காரர் ரியாஸ் அகமது தாக்கூர், அவரது மகன் அலி அகமதுவை துப்பாக்கியால் சுட்டனர். இதில், ரியாஸ் உயிரிழந்தார். இந்த நிலையில், தீவிரவாதிகள் நேற்று பொதுவெளியில் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள லிட்டர் நகரில் துர்காவங்கம் பாலத்தின் அருகே நேற்று அதிகாலை தீவிரவாதிகள் அங்கிருந்த மக்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனால், மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த தாக்குதலில் சோயிப் அகமது கானி என்பவர் காயமடைந்தார்.

அவர், சிகிச்சைக்காக புல்வாமா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை வேட்டையாட, பாதுகாப்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களை குறிப்பாக இந்துக்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினரை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்தும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு அக்டோபரில் ஸ்ரீநகரில் இட்கா பகுதியில் உள்ள அரசு பள்ளியின் தலைமையாசிரியர் சுபுந்தர் கவுர், ஆசிரியர் தீபக் சந்த்தை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

Related Stories: