கம்பம் பள்ளத்தாக்கில் 2ம் போகத்திற்கு தயாராகும் விவசாயிகள்-விதை நெல் வழங்க கோரிக்கை

தேவாரம் : கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் விவசாயத்துக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். கம்பம் பள்ளதாக்கில் சுமார் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் பாசன நீரை கொண்டு விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த வருடம் பெய்த மழையின் காரணமாக முதல் போக நெல் விவசாயம் சிறப்பாக முடிவடைந்த நிலையில்,  இரண்டாம் போகத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.  உத்தமபாளையம்,  ராயப்பன்பட்டி, கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

 இதற்காக நெல் நாற்றங்கால் போடுவது வழக்கம்.  40 நாட்களுக்கு முன்பே  விதைநெல்  வாங்கி தயார் செய்வர். விதை நெல் வேளாண்மைத் துறையினர் நன்கு  பரிசோதனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவர்.  இந்நிலையில் மானிய விலையில் வழங்கப்படும் விதை நெல்  தற்போதே வழங்கினால் தான் இரண்டாம் போகத்திற்கு வசதியாக இருக்கும். ஆனால் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள எந்த வேளாண்மை துறைக்கு சொந்தமான அரசு நெல் கிட்டங்கிகளிலும் இருப்பு இல்லை  என கைவிரிக்கின்றனர்.

விதை நெல்  வாங்கிட விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளை சந்தித்து இருப்பு உள்ளதா என விசாரித்து விட்டு, வெறும் கைகளுடன் செல்கின்றனர். எனவே உடனடியாக மானிய விலையில் விதை நெல் வழங்கிட தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க  முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: