திருவாரூர் அருகே மணல் கடத்திய லாரி மோதி மகள் கண்முன் தந்தை பலி-அமமுக பிரமுகரை கைது செய்யக்கோரி சாலை மறியல்

திருவாரூர் : திருவாரூர் அருகே மணல் கடத்தி சென்ற லாரி மோதி ஜவுளிக்கடை தொழிலாளி தனது மகள் கண்முன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான அமமுக ஒன்றிய செயலாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாரூர் அருகே பள்ளிவாரமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் வீரமணி (60). திருவாரூர் கடைத்தெருவில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராணி.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் சவுமியா, திருவாரூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தந்தையும், மகளும் தினமும் வீட்டிலிருந்து தனித்தனி சைக்கிளில் வேலைக்கு ஒன்றாக புறப்பட்டு செல்வது வழக்கம்.இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து இருவரும் தனித்தனி சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அண்ணா தெரு என்ற இடத்தில் சென்றபோது பின்னால் சவுடு மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று வீரமணி சைக்கிள் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். அந்த லாரி நிற்காமல் சென்றதால் அரை கிலோ மீட்டர் தூரம் வரை சென்ற லாரியை பொதுமக்கள் விரட்டி சென்று மடக்கினர். தனது கண் முன்னே தந்தை லாரி மோதி பலியானதை பார்த்து மகள் சவுமியா அதிர்ச்சியில் மயங்கினார்.

இதையடுத்து வீரமணியின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள், அமமுக பிரமுகர் ஒருவர் பினாமி பெயரில் பல லாரிகளை வைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக சவுடு மணல் கடத்தி விற்பனை செய்து வருகிறார். தொடர்ந்து ஒரு வார காலமாக அந்த பகுதியில் இரவு, பகலாக இந்த லாரிகள் மின்னல் வேகத்தில் சென்று வருகிறது. இதனால் தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. அமமுக பிரகமுரை கைது செய்தால் தான் உடலை எடுக்க அனுமதிப்போம் என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தாசில்தார் நக்கீரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீசார், வீரமணி உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வைப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் குரும்பேரி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்பாபுவை (30) கைது செய்தனர்.

Related Stories: