தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் தர்மபுரி வருகை

*3 கி.மீ. தூரம் கொடி அணிவகுப்பு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அந்த 5 தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 6,24,627, பெண் வாக்காளர்கள் 6,15,311, மூன்றாம் பாலினத்தவர்கள் 150 என மொத்தம் 12,40,108 பேர் சமீபத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதில், வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக பாலக்கோடு தொகுதியில் 312 வாக்குச்சாவடிகளும், பென்னாகரத்தில் 320 வாக்குச்சாவடிகளும், தர்மபுரியில் 320 வாக்குச்சாவடிகளும், பாப்பிரெட்டிப்பட்டியில் 322 வாக்குச்சாவடிகளும், அரூர் தொகுதியில் 322 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,596 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.

சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பதற்றமான வாக்குச்சாவடிகளை அடையாளம் காணுதல், நுண் பார்வையாளர்களை பணியமர்த்தல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தர்மபுரி மாவட்டத்திற்கு மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை(துணை ராணுவம்) கம்பெனி வருகை தந்துள்ளது. உதவி ஆணையர் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஒரு காவல் ஆய்வாளர் உள்பட மொத்தம் 73 பேர் வந்துள்ளனர்.

இவர்கள் ஒரு கம்பெனியாக இடம்பெற்றுள்ளனர். இதேபோல், தேர்தல் பாதுகாப்பு பணியையொட்டி வரும் நாட்களில் 6 கம்பெனிகள் வரை வரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தர்மபுரியில், சட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

இந்த அணிவகுப்பு எஸ்பி அலுவலகத்தில் தொடங்கி, செந்தில் நகர், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு மருத்துவமனை, நான்கு ரோடு வரை 3 கி.மீ., தொலைவிற்கு நடந்தது. தர்மபுரி டிஎஸ்பி சிவராமன் தலைமையில், துணை ராணுவம், உள்ளூர் போலீசார் என 200க்கும் மேற்பட்டோர் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

Related Stories: