புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தின் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக-வினர் ஆர்ப்பாட்டம்!: ஒன்றிய அரசு, ஜிப்மர் இயக்குநரை கண்டித்து முழக்கம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பயன்படுத்தப்படும் அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகங்கள், பதிவுகள் உள்பட அனைத்து ஆவணங்களும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இருக்க வேண்டும் என அதன் இயக்குனர் ராகேஷ் அகர்வால் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி, வைகோ, அன்புமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இந்த செயலை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தன. இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் ஜிப்மரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.

ஒன்றிய அரசை கண்டித்தும், ஜிப்மர் இயக்குநரை கண்டித்தும் திமுகவினர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். திமுகவினரின் போராட்டம் காரணமாக ஜிப்மர் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக நாளை மதிமுக கண்டன போராட்டம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து சமூக அமைப்பினரும், பொது அமைப்பினரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பு வாபஸ் பெரும் வரை ஜிப்மர் மருத்துவமனை முன்பு தொடர்ச்சியாக போராட்டங்கள் அரங்கேறும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories: