3வது நாளாகதொடர்ந்து விசாரணை கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள் எங்கே..?

*ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் பதில்

கோவை : கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் 3வது நாளாக மீண்டும் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள் எங்கே என்று துருவி, துருவி விசாரித்தனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முக்கிய உதவியாளர் பூங்குன்றனிடம் கடந்த 29 மற்றும் 30ம் ேததி  தனிப்படை போலீசார் 16 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில், அவர் பல்வேறு முக்கிய தகவல்களை போலீசாரிடம் கூறினார்.

இந்நிலையில், கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் பூங்குன்றனிடம் நேற்று 3வது முறையாக விசாரணை நடத்தப்பட்டது. பூங்குன்றன், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிகாரம் மிக்கவராக இருந்தவர். சென்னை மற்றும் கொடநாடு பங்களாவில் இவர் அனுமதி இருந்தால் தான் ஜெயலலிதாவை சந்திக்க முடியும் என்ற நிலை இருந்தது.

பல்வேறு முக்கிய கடிதங்கள், ஆவணங்கள், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பை பூங்குன்றன் தான் முடிவு செய்து வந்தார். கொடநாடு பங்களாவில் நில ஆவணங்கள், பத்திரங்கள், அதிமுக தொடர்பான முக்கியமான பைல்கள், தேர்தல், கட்சி தொடர்பான ஆதாரங்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதை அபகரிக்கும் நோக்கத்தில் கொள்ளை நடந்த போது தான் தடுக்க வந்த காவலாளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. ஜெயலலிதா இறப்பிற்கு பின்னர் பங்களாவில் யாருடைய அதிகாரம் இருந்தது, ஆவணங்கள், பத்திரங்கள், பங்களாவில் இருந்த பொருட்கள் எங்கே போனது, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என பூங்குன்றனிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.

பூங்குன்றன் 2 முறை நடந்த விசாரணையின் போது பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். இதில், சில விஷயங்களில் இருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த 3வது விசாரணை நடத்தப்பட்டது. கொடநாடு பங்களாவிற்கு வந்து சென்ற நபர்கள் குறித்து  கேள்வி கேட்கப்பட்டது. அந்த நபர்கள் குறித்து பூங்குன்றன் அளித்த தகவல் பதிவு செய்யப்பட்டது.

கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள், பத்திரங்கள் எங்கு கடத்தி செல்லப்பட்டது என்பது பற்றி சில விவரங்களை பூங்குன்றன் போலீசாரிடம் கூறியுள்ளார். இதில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. போலீசார் அவர் அளித்த பதில்களை வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: