பழநி அருகே புதுப்பொலிவு பெறுகிறது பெரியார் நினைவு சமத்துவபுரம்: முதல்வருக்கு குடியிருப்புவாசிகள் நன்றி

பழநி: பழநி  அருகே பெத்தநாயக்கன்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் சீரமைப்பு  பணிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த  குடியிருப்புவாசிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.பழநி  ஒன்றியத்திற்குட்பட்டது பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில்  கடந்த 2000ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் கலைஞர்  கருணாநிதியால் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைத்து கொடுக்கப்பட்டது.  நூலகம், சிறுவர் பூங்கா, அங்கன்வாடி மையம், ரேசன் கடை, அரசு துவக்கப்பள்ளி  என அனைத்து வசதிகளும் கொண்ட சமத்துவபுரமாக விளங்கியது. வீடில்லாத ஏழை  குடும்பங்களை சேர்ந்த பல்வேறு சமூக மக்கள் 100 பேருக்கு வீடுகள்  வழங்கப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளாக இங்கு மக்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால்  கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இங்கு எவ்வித பராமரிப்பு பணிகளும்,  அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வீடுகள் மிகவும்  பழுதடைந்து காணப்படுகின்றன. குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையம் மற்றும்  துவக்கப்பள்ளி கட்டிங்கள் சேதமடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது.  இந்நிலையில் சேதமடைந்தவற்றை சீரமைக்க வேண்டும் என சமத்துவபுரம் பொதுமக்கள்  அரசு தரப்பினரிடம் முறையிட்டு வந்தனர். இதுதொடர்பாக பழநி எம்எல்ஏ  ஐ.பி.செந்தில்குமார், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைத்தார்.

 இந்நிலையில் கடந்த ஏப்.30ல் திண்டுக்கல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,  பெத்தநாயக்கன்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிப்பு  மற்றும் புதுப்பித்தல், அங்கன்வாடி மையம், துவக்கபள்ளி கட்டிடம்  சீரமைத்தல், நூலக கட்டிடம் பராமரிப்பு பணி, தார்ச்சாலை அமைத்தல்  போன்றவற்றிற்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டினார்.  கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐ.பி.செந்தில்குமார்  எம்எல்ஏவுக்கு குடியிருப்புவாசிகள் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர்.

Related Stories: