4 விக்கெட் சாய்த்தார் ரபாடா பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் திணறல்

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் ரன் குவிக்க முடியாமல் திணறிய நிலையில், கடுமையாகப் போராடிய சாய் சுதர்சன் ஆட்டமிழக்காமல் 65 ரன் எடுத்தார். டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது. விருத்திமான் சாஹா, ஷுப்மன் கில் இருவரும் குஜராத் இன்னிங்சை தொடங்கினர். கில் 9 ரன் எடுத்து ரன் அவுட்டானார். சாஹா 21 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரபாடா வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 7 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

சாய் சுதர்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த... டேவிட் மில்லர், ராகுல் திவாதியா தலா 11 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ரஷித் கான் சந்த்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். பிரதீப் சங்வான் 2, லோக்கி பெர்குசன் 5 ரன் எடுத்து அணிவகுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய சாய் சுதர்சன் அரை சதம் அடித்தார். குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது. சாய் சுதர்சன் 65 ரன் (50 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), அல்ஜாரி ஜோசப் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ரபாடா 4 ஓவரில் 44 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அர்ஷ்தீப், ரிஷி தவான், லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது.

Related Stories: