மரக்காணம் அருகே ஊராட்சி பெண் ஊழியரை மிரட்டிய பாஜ நிர்வாகி மீது வழக்கு

மரக்காணம்: மரக்காணம் அருகே ஊராட்சி ஊழியரை செல்போனில் மிரட்டிய பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது செய்யாங்குப்பம் ஊராட்சியில் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செய்யாங்குப்பம் ஊராட்சி தலைவர் சுமதி, பஞ்சாயத்து செயலாளர் வீரப்பன், பணி தள பொறுப்பாளர் பரணிஈஸ்வரி உள்ளிட்டோர்  கலந்துகொண்டுள்ளனர்.  

இந்நிலையில் செய்யாங்குப்பம் பஞ்சாயத்தின் முன்னாள் ஊரட்சி மன்ற தலைவரும் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட பிரச்சார பிரிவு தலைவராகவும் உள்ள பிரேம் என்ற பிரிமிநாதன் அன்று இரவு செல்போன் மூலம் பணி தள பொறுப்பாளர்  பரணி ஈஸ்வரியை தொடர்பு கொண்டு இந்த கிராமத்தில் நீ வேலை செய்யக் கூடாது. 100 நாள் வேலை திட்டத்தில் நான் கூறும் ஆட்களைத்தான் பணியில் சேர்க்கவேண்டும் என்று கூறி ஆபாச வார்த்தைகளால் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பணி தள பொறுப்பாளர் பரணி ஈஸ்வரி மரக்காணம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். இதே பிரச்னை தொடர்பாக மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாசும் பிரேம் மீது மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார்களின் அடிப்படையில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரேமை தேடிவருகின்றனர்.

Related Stories: