சாஹல் என் சகோ...: குல்தீப் குஷி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நேற்று முன்தினம் மோதிய டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த போட்டியில்  3 ஓவர் பந்துவீசி 14 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் அள்ளிய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இது குறித்து அவர் கூறியதாவது: நான் சிறந்த பந்துவீச்சாளராக மாறியிருக்கலாம். ஆனால், மனதளவில்  முன்பை விட உறுதியாக இருக்கிறேன்.   வாழ்க்கையில் தோல்வி வரும்போது, அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டுமென்று கண்டுபிடித்து அதை செயல்படுத்த வேண்டும். அதனால், இப்போது தோல்வியை கண்டு பயப்படுவதில்லை.

ரஸ்ஸல் விக்கெட்டை எடுத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது முதல் 2 பந்துகளில் ரன் எடுக்கவில்லை என்றதுமே, அவர் ஆட்டமிழக்கப் போகிறார் என்று தெரிந்துவிட்டது. இது எனக்கு சிறந்த ஐபிஎல் சீசன். நான் எனது பந்து வீச்சை ரசிக்கிறேன்.  பேட்ஸ்மேன் எப்படி என் பந்தை அடிக்கிறார் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சரியான அளவில், சீராகப்  பந்துவீசுவதில்தான் என் கவனம் எப்போதும் இருக்கிறது.சிறப்பாக பேட்டிங் செய்துக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் அய்யர் விக்கெட்டும் முக்கியமான விக்கெட்தான். சக ஸ்பின்னரான யஜ்வேந்திர சாஹலுடன் நான் போட்டியாக இருந்ததில்லை. அவர் என் மூத்த சகோதரர் (அண்ணா). எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பவர். நான் காயமடைந்தபோது அவர் என்னை ஊக்குவித்தார். இந்த சீசனில் அதிக விக்கெட்களை கைப்பற்றி அவர்தான் ஊதா தொப்பியை வெல்வார் என்று நம்புகிறேன். இவ்வாறு குல்தீப் கூறினார்.

Related Stories: