அம்மாபேட்டை அருகே கோனேரிபட்டி கதவணை நீர்மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

பவானி : அம்மாபேட்டை  அருகேயுள்ள கோனேரிப்பட்டியில் கதவணை நீர்மின் நிலையம் உள்ளது. காவிரி  ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இக்கதவணை நீர்மின் நிலையத்தில் தண்ணீர்  தேக்கி வைக்கப்பட்டு, 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு  வருகிறது.மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும்  தண்ணீர் செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை,  சமயசங்கிலி, வெண்டிபாளையம் ஆகிய இடங்களில் உள்ள கதவணைகளைக் கடந்து டெல்டா  பாசனத்துக்குச் செல்கிறது. மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படாத  காலங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில்,  கோனேரிபட்டி கதவணை நீர்மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர்  முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  இதனால், கோனேரிபட்டி நீர்தேக்க பகுதிகளான ஆனந்தம்பாளையம், சிங்கம்பேட்டை,  சிலுவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வடிந்து பாறைகளாகக்  காட்சியளிக்கிறது.

தற்போது பராமரிப்புப் பணிகள்  தொடங்கப்பட்டுள்ளதால் ராட்சத இரும்புக் கதவுகள் மேல்நோக்கிக் தூக்கி,  இரும்புக் கதவுகளில் ஏதாவது சேதங்கள் ஏற்பட்டுள்ளதா?

என்பது ஆய்வு  செய்யப்பட்டு, பேரிங்களுக்கு கிரீஸ் போடப்படும். தண்ணீர் தேங்கும்  பகுதிகளில் உள்ள ஆகாயத்தாமரைகள், கற்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும்  அகற்றப்படும்.

மின் உற்பத்தி நடைபெறும் பகுதிகளில் ஊழியர்கள் இறங்கி  பராமரிப்பு பணிகள் செய்து வருகின்றனர். இப்பணிகள் நிறைவடைந்த பின்னர்  மீண்டும் கதவணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். கடல் போன்று  தேக்கப்பட்டிருந்த பகுதியில் தற்போது தண்ணீர் இல்லாததால் வறண்டுபோய்  காட்சியளிக்கிறது.

Related Stories: