ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை-நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சேலம் : ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஏற்காட்டில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார். பின்னர், ஏற்காடு சுற்றுலா தள மேம்பாடு குறித்து, அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பிடிஓ அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், ‘‘ஏற்காட்டிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவரும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாலையோரக் கடைகளை வரன்முறைபடுத்துவது தொடர்பாக, வியாபாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்காடு படகு இல்லம், அண்ணா பூங்கா உள்ளிட்ட இடங்களை மேம்படுத்தவும், ஏரிகளின் கழிவு நீர் வெளியேற்றம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,’’ என்றார்.

இதனையடுத்து, இளம்பிள்ளையை  அடுத்த கல்பாரப்பட்டிக்கு சென்ற அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 5 பேரூராட்சிகள் மற்றும் 3 ஒன்றியங்களைச் சார்ந்த 778 ஊரக குடியிருப்புகளுக்கு ₹652.84 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிட்டார்.

முன்னதாக, சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 3 முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ₹25 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். இந்த ஆய்வுகளின் போது குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வம், துணை மேயர் சாரதா தேவி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் செங்கோடன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: