குடிநீர் குழாய் சேதப்படுத்தியதில் நடவடிக்கை எடுக்காததால் வாலிபர் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி-தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தஞ்சாவூர் : தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு இருந்தார்.அப்போது திருமலைசமுத்திரம் அருகே மாதுரான் புதுக்கோட்டையை சேர்ந்த தொழிலாளி உதயகண்ணன் என்பவர் மனு கொடுக்க காத்திருந்தார். அப்போது திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டார். இதை பார்த்த அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து சென்று உதயக்கண்ணனிடம் இருந்து பாட்டிலை பறித்து வீசினர். பின்னர் அவர் மீது தண்ணீரை கொட்டினர்.

இதுகுறித்து உதய கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் கூறியதாவது: எங்கள் வீட்டுக்கு பஞ்சாயத்து குழாயில் இருந்து குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. அந்த இணைப்பிலிருந்து எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவர் தானாக முன்வந்து குடிநீர் இணைப்பு கேட்டார். எங்கள் இணைப்பில் இருந்து சுமார் 5 ஆண்டுகளாக குடிநீர் பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் எனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எங்களுடைய தேவைக்காக கழிவறை வசதி வேண்டி குழி தோண்டும் போது எதிர்பாராதவதமாக குழாய் உடைந்து விட்டது. உடனே அந்த நபரிடம் வேறு வழியில் குடிநீர் அமைத்துக் கொள்ளுமாறு கூறி விட்டோம். பின்னர் ஊராட்சித் தலைவரிடமும் இதுகுறித்து கூறினோம். அந்த நபர் சிலருடன் வந்து குடிபோதையில் என்னையும் குடும்பத்தினரையும் அவதூறாக பேசி திட்டியுள்ளார்.

மேலும் கம்பி வேலி அமைத்து குடிநீர் குழாயை உடைத்து எங்கள் வீட்டை சேதப்படுத்தி உள்ளார். பின்னர் போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவிலலை.

என் மீது வழக்குப்பதிவு செய்து என் வாழ்க்கையே சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர். எனவே அந்த நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: