டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆறுதல்; கத்தியால் குத்தப்பட்ட பெண் எஸ்ஐக்கு ரூ5 லட்சம் நிவாரணம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்

நெல்லை: நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ மார்க்ரெட் தெரசா (29). இவர், சுத்தமல்லி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பழவூர் உச்சினிமாகாளியம்மன் கோயில் கொடை விழாவில் நேற்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, போதையில் பைக் ஓட்டியதால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம் (40) என்பவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த எஸ்ஐ, நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் எஸ்ஐ மார்க்ரெட் தெரசாவை, நேற்று செல்போனில் தொடர்பு கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறியதோடு, அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க கலெக்டருக்கு உத்தரவிட்டார். இதுதவிர, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே எஸ்ஐ யை, கலெக்டர் விஷ்ணு, எஸ்பி சரவணன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்ஐ மார்க்ரெட் தெரசாவை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அவரிடம் வழங்கினார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவும் அமைச்சருடன், எஸ்ஐ யை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எஸ்ஐ நலமுடன் உள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்.

அவருக்கு முதல்வர் உத்தரவுப்படி உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்றார். டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில், ‘‘தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் நல்லுறவைப் பேண வரவேற்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். போலீசாருக்கு வார விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. குற்றச்செயல்கள் குறைந்துள்ளன’’ என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: