சரவணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடியும் அபாயம்

*பள்ளி திறப்புக்குள் நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

கோவை : கோவை சரவணம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சுமார் 520 மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளி வரும் ஜூன் 6-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இப்பள்ளியை சுற்றி கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் இடியும் நிலையில் உள்ளது. சுவரின் பல இடங்களில் விரிசல் விட்டு உள்ள நிலையில், தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக எப்போது வேண்டும் என்றாலும் பள்ளியின் சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி நிர்வாகம் சார்பில், சுற்றுச்சுவர் மிகவும் மோசமாக விழும் நிலையில் உள்ளதால் அதன் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பேனரை சுற்றுச்சுவர் மீது ஒட்டியுள்ளனர். பள்ளி திறக்க இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இடிந்து விழும் நிலையில் இருக்கும் சுற்றுச்சுவரை முழுமையாக இடித்து புதிய சுற்றுச்சுவர் கட்டி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ரங்கசாமி கூறுகையில், ‘‘சுற்றுச்சுவர் சேதமடைந்து உள்ளது குறித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுற்றுச்சுவரை ஆய்வு செய்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சுற்றுச்சுவர் சேதமடைந்து இருப்பதால், அதனை முழுவதுமாக இடித்து அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இது குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி திறப்புக்குள் புதிய சுற்றுச்சுவர் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

The post சரவணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடியும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: