மழைக்காலம் வந்தாச்சு ரயிலில் ஒழுகும் மழை நீருக்கு எப்போது தீர்வு: பயணிகள் கேள்வி

சென்னை: இந்தியாவின் ரயில்வே போக்குவரத்து அமைப்பு உலகின் 4வது பெரிய ரயில் நெட்வொர்க் ஆகும். முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளது. ரயில்வே இணைப்பு நாட்டின் மூலை முடுக்குகளையும் இணைப்பதால், மிகவும் முக்கியமான, அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக உள்ளது. நாடு முழுவதையும் உள்ளடக்கிய 67,368 கிமீ நீளம் கொண்ட வழித்தடங்களில், 115,000 கிமீ பரப்பளவில் அமைந்துள்து.
இந்திய ரயில்வே துறை, ஒரே நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படும் உலகின் இரண்டாவது பெரிய நெட்வொர்க் ஆகும். இப்படி பெயரும், புகழும் பெற்ற இந்திய ரயில்வே துறையானது கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் குறைகளை தீர்க்க வழியில்லாமல் லாபத்திற்காக மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக ரயிலில் உள்ள ஜன்னல், கதவு, மேற்கூரை, மின்விசிறி, மின்விளக்குகள் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களில் சென்னை – நெல்லை, சென்னை – குருவாயூர், சென்னை- மேட்டுப்பாளையம் போன்ற நெடுந்தூரம் செல்லும் ரயில்களில் மழைநீர் அருவி போல் கொட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ரயிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ரயில் பெட்டிக்குள் தண்ணீர் கசியும் காட்சிகளை பயணிகள் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த ரயில்கள் எல்லாம் ஏறத்தாழ 10 மணி நேரத்திற்கும் அதிகமாக செல்கிறது. அதுவும் இரவு நேரங்களில் இயக்கப்படுகிறது.

இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்து ரயிலுக்குள் குடை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவம் மழை காலத்தில் ரயிலில் பயணித்த பயணிகளுக்கு பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ரயில் பயணிகள் பலமுறை புகாரளித்தும் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக உள்ளது. இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘ரயிலில் மழை நீர் ஒழுகுவதை எல்லா மழை காலங்களிலும் பார்த்து வருகிறோம். அதுவும் அதிக பணம் கொடுத்து ஸ்லீப்பர் பெட்டிகளில் செல்பவருக்கும் இந்த நிலை. ரயில்வே நிர்வாகம் பெட்டிகளை முறையாக பராமரிக்காததால், இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்து ரயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் வரும் காலத்தில் நடைபெறாமல் இருக்க ரயில்வே அதிகாரிகள் போதிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். ரயில் பெட்டிகளை சீர் செய்வதோடு அவ்வப்போது சீரான முறையில் பெட்டிகள் உள்ளதா என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயிலில் முதியவர்கள் குழந்தைகளுடன் வருபவர்கள்தான் அதிக பயணம் செய்கிறார்கள். அப்படி இருக்கையில், ரயிலுக்குள் இரவு நேரத்தில் தூக்கத்தை தொலைக்கும் அளவுக்கு இப்படி மழை நீர் ஒழுகினால் பயணிகள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாமல் ரயிலில் உள்ள ஜன்னல்கள் சரியாக மூடாமல் உள்ளது. எல்லா பிரச்னைகளையும் எப்படி அட்ஜஸ்ட் செய்வது. ரயில்வே மீது எங்களுக்கு நம்பிக்கையே போய் விட்டது,’’ என்றனர்.

 

The post மழைக்காலம் வந்தாச்சு ரயிலில் ஒழுகும் மழை நீருக்கு எப்போது தீர்வு: பயணிகள் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: