ராமநாதபுரம் மாவட்டத்தில் 113 கண்மாய்களில் வண்டல் மண் அள்ள விரைவில் அனுமதி-விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வேளாண்- உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் நேற்று நடந்தது.

இதில் தெரிவிக்கப்பட்டதாவது: அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை ( ஏப்.24) நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டங்களில் கிஷான் கடன் அட்டை, பயிர் காப்பீடு, வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட உள்ளது. விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை பெறுவதற்கான முகாம் நாளை (ஏப்.24) முதல் மே 1 வரை நடைபெற உள்ளது. மே 1 கிராமசபை கூட்டத்தில் வேளாண்- உழவர் நலத்துறை சார்பில் உள்ள திட்டங்களின் சார்பில் 202223ம் ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கடந்த 2021-22ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 61 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 114 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வெரு கிராம ஊராட்சிகளுக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அடிப்படை தகவல்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமை நடைபெறும்.

கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 37 மனுக்களில் 36 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 1 மனு தொடர் நடவடிக்கையில் உள்ளது. பருத்தி சாகுபடிக்கு கூடுதலாக விவசாயிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன. நகைக்கடன் தள்ளுபடியில் விடுபட்டோர் தற்போது அளித்து வரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.

கூடுதல் விலைக்கு உரம் விற்கப்படுவது குறித்த புகார் மீது மாவட்ட அளவிலான அமைக்கப்பட்ட குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ராமநாதபுரம் வட்டத்தில் 10, கீழக்கரை வட்டத்தில் 8, பரமக்குடி வட்டத்தில் 28, முதுகுளத்தூர் வட்டத்தில் 3, ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்தில் 33, திருவாடானை வட்டத்தில் 31 என மாவட்டத்தில் 113 கண்மாய்களிலிருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க பொதுப்பணி துறை மூலம் அரசாணை வெளியிடப்பட உள்ளது.

பாசன விவசாயிகள் வட்டாட்சியரிடம் மனு அளித்து இத்திட்டம் மூலம் பயன்பெறலாம். வனவிலங்குகளால் சேதமடைந்த பயிரின் இழப்பீடு பெற சம்பந்தப்பட்ட விவசாயிகள் வனம், வருவாய்த்துறை அறிக்கை பெற்று வேளாண் துறை மூலம் அதற்கான இழப்பீட்டு தொகை பெற்று கொள்ளலாம்.

இதில் வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) சேக் அப்துல்லா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனிக்கொடி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: