திருப்புவனம் பகுதியில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு: விவசாயிகள் கவலை

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி மடப்புரம் சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் பெருமளவு நடைபெறுகிறது. தென்னை மரங்களில் இருந்து 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய்கள் வெட்டப்படும் ஒரு மரத்திற்கு 20 முதல் 50 தேங்காய் வரை கிடைக்கும் திருப்புவனம் பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன இப்பகுதியில் நெட்டை மரங்களே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. தேங்காய்கள் வெட்ட வத்திராயிருப்பு, பேரையூர், பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மரம் ஏறும் தொழிலாளர்கள் வருவர் ஒரு மேஸ்திரி தலைமையில் 15 முதல் 30 பேர் கொண்ட குழுவினர் தென்னை மரங்களில் இருந்து தேங்காய்கள் வெட்டுவர் ஆண்கள் தேங்காய்கள் வெட்ட பெண்கள் அதனை தலைச்சுமையாக சுமந்து ஒரு இடத்தில் குவிப்பார்கள். ஒரு மரத்தில் தேங்காய் வெட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஐந்து ரூபாயில் தொடங்கி தற்போது 20 ரூபாய் வரை விவசாயிகள் வழங்குகின்றனர்.

நாள் ஒன்றுக்கு ஒரு குழு 1000 மரங்களில் தேங்காய் வெட்டும். தற்போது கோடை காலம் என்பதால் நுங்கு, பதநீர் உள்ளிட்டவற்றிற்கு வரவேற்பு அதிகம் உள்ளது. மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் என்பதால் கூலி ஆட்கள் அந்த பகுதிகளுக்கு சென்று விட்டனர். இதனால் தேங்காய் வெட்ட ஆட்கள் கிடைக்கவில்லை. தென்னை மரங்களை காட்டிலும் பனை மரங்களில் வெட்ட கூலி அதிகம். மரங்களும் உயரம் குறைவு என்பதால் கூலி ஆட்கள் அங்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக தேங்காய் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. 60 நாட்களுக்கு ஒரு முறை வெட்டப்பட வேண்டிய தேங்காய்கள் தற்போது 99 நாட்கள் கடந்து வெட்டப்படுவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். வேளாண்துறை சார்பில் நவீன இயந்திரம் உள்ளிட்டவைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், செயல்பாட்டிற்கு வராததால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மதுரையை மையப்படுத்தி தென்னை சார்ந்த தொழில்களுக்கு பயிற்சி மையம், கொள்முதல் மையம் உள்ளிட்டவைகள் அமைத்தால் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணலாம் என தென்னை விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: