அரசு வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று ஜி.ஹெச் வளாகத்தில் மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பலாத்காரம்: மருத்துவமனை ஊழியர் உட்பட 3 பேர் கைது

விஜயவாடா: அரசு வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று அரசு மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், மருத்துவமனை ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் விஜயவாடா அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் மயக்க நிலையில் கிடந்த 23 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை போலீசார் மீட்டனர்.

அந்த பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சிட்டி போலீஸ் கமிஷனர் காந்தி ராணா டாடா கூறுகையில், ‘கடந்த செவ்வாய் கிழமை முதல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண் அவரது வீட்டில் இல்லை. அவரது பெற்றோர் தங்களது மகள் மாயமானது குறித்து நுன்னா போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து நுன்னா போலீசார் வழக்குப்பதிந்து அந்தப் பெண்ைண தேடி வந்தனர்.

செவ்வாய்கிழமை இரவு வம்பை காலனியை சேர்ந்த ஸ்ரீகாந்தை என்பவரை அந்தப் பெண் சந்தித்தது தெரியவந்தது. விசாரணையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை மருத்துவமனையின் ஒதுக்குப்புறமான இடத்திற்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார். ெதாடர்ந்து அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த அவர், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தொடர்ந்து அதே மருத்துவமனையில் கட்டுப்பாட்டாளராக பணியாற்றும் ஸ்ரீகாந்தின் நண்பர் பாபு ராவ் என்பவரும், மற்றொரு நண்பரான பவன் கல்யாண் என்பவரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். தொடர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் மருத்துவமனை வளாகத்திலேயே அந்தப் பெண் சுயநினைவின்றி காணப்பட்டாள். அந்தப் பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்  ஸ்ரீகாந்த் (26), அவரது நண்பர்கள் பாபு ராவ் (30), பவன் கல்யாண் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்’ என்றார். இச்சம்பவம் குறித்து ஆந்திர மாநில மகளிர் கமிஷன் தலைவி வசிரெட்டி பத்மா கூறுகையில், ‘விஜயவாடா அரசு மருத்துவமனையில் நடந்த பலாத்கார சம்பவ வழக்கு குறித்து விஜயவாடா நகர போலீஸ் கமிஷனரிடம் விசாரித்தேன். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குமாறு மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.

Related Stories: