சங்குதுறை பீச்சில் இடிந்துவிழும் நிலையில் காட்சி கோபுரம்- புதிதாக அமைக்க கோரிக்கை

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளன. வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள், மற்றும் உலக நாடுகளில் இருந்தும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். குமரி மாவட்டத்தில் இருக்கும் அழகிய கடற்கரை பகுதிகளில் சங்குதுறை பீச்சும் ஒன்று. இந்த பீச்சில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நாட்களில் காவல்துறை சார்பில் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கும். கடற்கரையோரம் மண் அரிப்பை தடுக்கும் வகையில் சவுக்குமரங்கள் அதிக அளவு நடப்பட்டு ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

சங்குதுறை பீச்சிற்கு சென்றவுடன் அங்கு முதலில் அனைவரையும் கவர்வது ராட்சத சங்கு. இதனை சுற்றி காங்கிரீட் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர காட்சி கோபுரமும் உள்ளது. சங்குதுறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் மற்றும் கடற்கரை அழகை பார்த்து ரசித்து புகைப்படம் எடுக்கும் வகையில் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த காட்சிகோபுரத்தை வாலிபர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் அந்த காட்சி கோபுரத்தில் உள்ள கைப்பிடிகள் அனைத்தும் உடைந்துள்ளது. மேலும் காட்சிகோபுரம் முழுவதும் சிதிலம் அடைந்து காணப்படுகிறது.

இதனால் காட்சி கோபுரத்தின் ேமலே செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அஞ்சுகின்றனர். மேலும் குடிமகன்கள் அங்கு சென்று மது அருந்தி விட்டுச் செல்கின்றனர். மதுபாட்டில்கள் அங்கு குவிந்து கிடப்பதை பார்க்க முடிகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கடல்சீற்றத்தின் காரணமாக ஏற்பட்ட ராட்சத அலைகளின் அங்கு போடப்பட்டு இருந்த இருக்கைகள் சேதமாகியுள்ளது. இதுபோல் ராட்சத சங்கும் பாதிக்கப்பட்டுள்ளது. அழகு நிறைந்த சங்குதுறை பீச்சை மேலும் அழகுபடுத்த, அங்கு உடைந்துள்ள இருக்கைகளை அகற்றி விட்டு புதிய இருக்ைகள் போடப்படவேண்டும். மேலும் கடலின் அழகை காண்பதற்கு காட்சி கோபுரம் புதிதாக அமைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பள்ளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: சங்குதுறையில் உள்ள காட்சி கோபுரத்தின் தடுப்புசுவர்கள் அனைத்தும் உடைந்துள்ளது. அடிப்பாகமும் சேதமடைந்துள்ளது. இதனால் மனதைரியம் உள்ள வாலிபர்கள் மட்டுமே காட்சி கோபுரத்தின் மேல்பகுதிக்கு செல்கின்றனர்.  

சங்குதுறை பீச்சிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் அமர்ந்து அழகை ரசித்துவிட்டு செல்கின்றனர். காட்சிகோபுரம் சேதமடைந்துள்ளதால் அதன் அருகே சுற்றுலா பயணிகள் செல்வது இல்லை. சங்குதுறை பீச்சை மேலும் அழகுபடுத்த மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவார்கள்

என்றனர்.

Related Stories: