கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த தண்ணீர்; ஈரோடு, திருப்பூரில் வீடுகள், கோயிலை சூழ்ந்த வெள்ளம்: குன்னூரில் மண்சரிவு மலை ரயில் ரத்து

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது. நள்ளிரவுக்கு பின்னரும் மழை தூறிக்கொண்டே இருந்தது. சத்தியமங்கலத்தை ஒட்டிய தெங்குமரஹாடா வனப்பகுதியில் உள்ள மாயாற்றில் செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வனகிராம மக்கள் பரிசல் மூலம் ஆற்றை கடக்கின்றனர்.

கோபி அருகே 20க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பிய நிலையில் உபரி நீர் வெளியேறி வந்தது. நம்பியூர் பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பெரியார் நகர், சி.எஸ்.ஐ வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. இதில் பெரியார் நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பேருந்து நிலையம் முன்பு 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் கோபி-கோவை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மழை காரணமாக 2 வீடுகள் இடிந்து விழுந்தது. மேலும் மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் கனமழையால் இடிந்து விழுந்தது. குப்பிபாளையம் பாப்பாங்குட்டை நிரம்பி வெளியேறிய உபரி நீர் அந்த பகுதியில் உள்ள 25 வீடுகளை சூழ்ந்தது.

கோயிலை சூழந்த வெள்ளம்: கனமழையால் திருப்பூர் மாவட்டம் அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலை மழை வெள்ளம் சூழ்ந்தது. கோயிலுக்கு செல்லும் பாதையும் நீரில் மூழ்கியது. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வது தடைபட்டுள்ளது. வரட்டுபள்ளம் அணை, பவானிசாகர் அணை, சிறுவாணி அணை, பில்லூர் அணை ஆகியவற்றுக்கு மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளான சிறுவாணி, அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வருகிறது.
மேற்கு மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்றும் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்தவண்ணம் இருந்தது. குறிப்பாக கொட்டாரம், பாலமோர், தக்கலை, குளச்சல், குருந்தன்கோடு, மாம்பழத்துறையாறு உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை அணையில் மறுகால் நேற்று முன்தினம் மாலையில் திறக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பும், மின்தடையும் ஏற்பட்டது. திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று முழுவதும் பரவலான மழை பெய்தது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம், அச்சன்புதூர், புளியங்குடி, சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம், மெஞ்ஞானபுரம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பாபநாசம், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த சில தினங்களாக தமிழக – கர்நாடக எல்லை வனப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, சேலம், கொளத்தூர் அருகே வறண்டு கிடந்த பாலாற்றில், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.இதேபோல் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்தது.

கொடிவேரியில் குளிக்க தடை: பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் விடிய விடிய கன மழை பெய்ததன் காரணமாக கொடிவேரி அணைப்பகுதியில் ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. இதனால் கொடிவேரி அணையை மூடி பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.

குன்னூரில் மண் சரிவு: நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு துவங்கிய மழை இரவு சுமார் 1 மணி வரை கொட்டி தீர்த்தது. குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் வண்டிச்சோலை அருகே சாலை ஓரத்தில் இருந்த மரம் குறுக்கே விழுந்தது. மண் சரிவும் ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற கார் சேற்றில் சிக்கியது. நேற்று காலை ஊட்டி எட்டினஸ் சாலையில் குறுக்கே ஒரு மரம் விழுந்தது. இதனால், இவ்வழித்தடத்தில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மலை ரயில் ரத்து: மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு 184 பயணிகளுடன் ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அடர்லி – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் விழுந்ததில் தண்டவாளம் சேதமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து மலை ரயில் சேவை நேற்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

The post கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த தண்ணீர்; ஈரோடு, திருப்பூரில் வீடுகள், கோயிலை சூழ்ந்த வெள்ளம்: குன்னூரில் மண்சரிவு மலை ரயில் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: