கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் கடைசியாக பேசியது என்ன?: அதிமுக நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக நிர்வாகியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நீலகிரியில்  உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன்  அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன் ஆகியோரிடம் தனிப்படை  போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று கோவை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை  செயலாளர் அனுபவ் ரவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அனுபவ் ரவி, கோவையில் நகைக்கடை  நடத்தி வருகிறார். ஏற்கனவே இவரிடம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து அவர் தன்னிடம் விசாரணை நடத்தக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் விசாரணைக்கு தடை விதிக்கப்படவில்லை என தெரிகிறது.

நேற்று  போலீசார் 6 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரித்தனர். அப்போது கனகராஜ்  இறக்கும் முன் அனுபவ் ரவியுடன் செல்போனில் பேசிய விவரம் தெரியவந்தது.  கனகராஜின் செல்போன் தொடர்புகள், அழைப்புகளில் அனுபவ் ரவிக்கு  முக்கியத்துவம் வழங்கியிருப்பதாக தெரிகிறது. கனகராஜூடன் எப்படி பழக்கம்  ஏற்பட்டது. இவரை யார் அறிமுகம் செய்து வைத்தார்கள்?, கொடநாடு எஸ்டேட்டிற்கு  அனுபவ் ரவி சென்று வந்தாரா? இந்த வழக்கில் கைதானவர்களுடன் அறிமுகம்  இருக்கிறதா?, கனகராஜிடம் பேசியது என்ன? என போலீசார் விசாரித்தனர்.

கனகராஜின் அரசியல் பிரமுகர்களின் தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட்டது.  அதிமுக வட்டாரத்தில் முக்கிய பிரமுகர்கள் கனகராஜிடம் மோதல் போக்கில்  இருந்தார்களா?, அவர்களுக்கு விரோதம் இருந்ததா? என போலீசார் விசாரித்தனர்.  அனுபவ் ரவி அளித்த தகவல்கள் அடிப்படையில் போலீசார் மேலும் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Related Stories: