தொட்டபெட்டா முதல் கட்டபெட்டு வரை 16 கி.மீ தூரம் ஓடிய சுகாதார துறை அமைச்சர்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு

ஊட்டி:  நீலகிரி வந்த சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொட்டபெட்டா முதல் கட்டபெட்டு வரை 16 கிமீ தூரம் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.தமிழக  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள அதிக அக்கறை காட்டுவார்.  தினமும் தவறாமல் அதிகாலை உடற்பயிற்சி மற்றும்  ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்  கீழ் நடமாடும் மருத்துவ வாகன இயக்கம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட  முகாம் மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும்  மருத்துவ கட்டமைப்புகளை தொடங்கி வைக்கும் நிகழ்வுகளுக்காக நேற்று முன்தினம்  அமைச்சர் சுப்பிரமணியன் ஊட்டிக்கு வந்தார். ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நேற்று  முன்தினம் இரவு தங்கிய அவர், நேற்று காலை 5 மணிக்கு ஊட்டி கோத்தகிரி  சாலையில் தொட்டபெட்டாவில் தொடங்கி கட்டபெட்டு வரை 16 கிமீ தூரம்  ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார்.

தொடர்ந்து கட்டபெட்டு பகுதியில் உள்ள அரசு  ஆரம்ப சுகாதார நிலையத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற  வந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவர்கள்,  செவிலியர்களிடம் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆரம்ப  சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதி வேண்டும் என்று  கோரிக்கை வைக்கப்பட்டது. அதை உடனடியாக நிறைவேற்றி தருவதற்கு உரிய  அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை  அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதேபோன்று, முத்தநாடு மந்து  பழங்குடியினர் கிராமத்தில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கும்  திட்டத்தை துவக்கி வைத்த பின் அவர்களுடன் இணைந்து யோகா செய்தும்  அசத்தினார்.

Related Stories: