திருத்தணியில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு விஜயராகவபெருமாள் ஊர்வலம்

திருத்தணி: திருத்தணியில் விஜயராகவபெருமாள் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருத்தணி நந்தி ஆற்றின் கரையில் உள்ள விஜயராகவபெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை பெருமாள், லட்சுமி தாயாருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதில் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர்.இதன்பிறகு பெருமாள், லட்சுமி தாயார் ஆகியோரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் வைத்து ஊர்வலமாக அழைத்துவந்தனர். தொடர்ந்து ஆறுமுகசாமி கோயில் தெரு, பெரிய தெரு, கீழ் பஜார், ஜோதிசாமி கோயில் தெரு, கந்தசாமி கோயில் தெரு மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு வழியாக ஊர்வலம் வந்தது. அப்போது வீடுகள்தோறும் பக்தர்கள், தேங்காய், பழம் படைத்து பெருமாளை வழிபட்டனர். திருத்தணி நகர வியாபாரிகள் சங்கம் சார்பில், வழிநெடுக பக்தர்களுக்கு நீர், மோர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் பரஞ்ஜோதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோயிலில் 36ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. இதில் காலை 10.00 மணிக்கு பெண்கள் 108 பால்குடங்களை ஏந்தி சன்னதி தெருவில் இருந்து பத்ரகாளியம்மன் சன்னதியை சென்றடைந்தனர். பின்னர் 11:00 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு மகா தீபாராதனை நடந்து.  மாலை 7:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு  12:00 மணிக்கு கற்பூர ஜோதி தரிசனம் நடைபெற்று விழா நிறைவு பெற்றது. இந்த விழாவில்  உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.

Related Stories: