தமிழ் புத்தாண்டையொட்டி அண்ணாமலையார் கோயிலில் தங்க தேர் இழுத்து வழிபட்ட பக்தர்கள்

*திரளானோர் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழ்புத்தாண்டையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்க தேரில் சந்திரசேகரர் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தங்க தேரினை பக்தர்கள் இழுத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

தங்க கவசத்தில் பக்தர்களுக்கு சம்மந்த விநாயகர் அருள்பாலித்தார். மேலும், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் வாசித்தனர். மேலும், மாடவீதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூதநாராயண பெருமாள் காய் மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரமும், தங்க கவசமும், வெள்ளி கிரீடமும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் நேற்று கிரிவலம் வந்தனர்.

Related Stories: