சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரையில் ரூ.50 கோடியில் நவீன மீன் சந்தைகள் நிறுவப்படும்.: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: வள்ளலாரின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 20 கோடியில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் தொடங்கப்படும். சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரையில் ரூ.50 கோடியில் நவீன மீன் சந்தைகள் நிறுவப்படும் என சட்டப்பேரவையில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அதனையடுத்து பேசிய அவர், நாகை மீன்பிடித் துறைமுகம் ரூ.81 கோடியில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

அயிரை மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, அயிரை மீன் ஆராய்ச்சி மையம் ரூ.2.9 கோடியில் அமைக்கப்படும். மீன் பதனிடும் நிலையங்களை அமைப்பதற்கான உரிமைகளை ஒற்றை சாளர முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் மீன்பிடி துறைமுகங்களில் மீன் பதனிடுதல், ஏற்றுமதிக்கு தேவையான கட்டமைப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  

மேலும் விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கிகள் போல, மீனவர்களும் வங்கி சேவைகளை எளிதாக பெற மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொலைதூர கிராமங்களில் உள்ள விவசாயிகளின் இருப்பிடத்தில் மருத்துவ சேவைகளை வழங்க, ரூ.85.53 லட்சத்தில், 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

செட்டிநாடு கால்நடை பண்ணையில் ரூ.14.73 கோடியில் நாட்டு கோழி இன பெருக்க பண்ணை, கோழி குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்படும். நெல்லையில் ரூ.5 கோடி செலவில் வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்படும். மேலும் தமிழகத்தின் நாட்டின் மீன்களை பாதுகாத்து பெருக்கிட ரூ.5 கோடியில் நாட்டின மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்படும் என கூறினார்.

கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டம் புழக்கடை கோழியின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் ரூ.2.12 கோடி செலவில் நிறுவப்படும். மேலும் நாட்டின நாய்கள் இனப்பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் ரூ.1 கோடி செலவில் தென்காசியில் நிறுவப்படும் என்றும் அவர் சட்டப்பேரவையில் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: