ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம் கோலாகலம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். உத்திரமேரூரில் ஸ்ரீஆனந்தவள்ளி சமேத ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாளன்று ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிகளுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, லட்சுமி பூஜை, கோ பூஜை, ஆண்டாள் திருப்பாவை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.இதையடுத்து, 3ம் நாளான நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும், கோயிலில் இருந்து புறப்பட்ட ஸ்ரீசுந்தர வரதராஜ பெருமாள் ராயர்தெரு, கருணீகர்தெரு, திருமலையா பிள்ளை தெரு, பஜார் வீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், பஸ் நிலையத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயிலை வந்தடைந்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் தீபாராதனை காண்பித்து, தேங்காய் உடைத்தும் சுவாமியை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து மீண்டும் சுவாமி கோயிலை சென்றடைந்தார். விழாவில் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.

Related Stories: