15 லட்சம் டன் அரிசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்யவில்லை டெல்லியில் சந்திரசேகர் ராவ் தர்ணா: பிரதமர் மோடிக்கு 24 மணி நேர கெடு

புதுடெல்லி: தெலங்கானா மாநிலத்தில் நடப்பு ராபி பருவத்தில் 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்யவில்லை. ஒன்றிய அரசின் கொள்முதல் கொள்கைக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தெலங்கானாவிடம் இருந்து புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் உள்ள தெலங்கானா பவன் முன், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர் ராவ் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் செயல் தலைவரும், முதல்வரின் மகனுமான ராம் ராவ், கட்சியை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்சிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, முதல்வர் சந்திரசேகர்ராவ் பேசுகையில், ‘விவசாயிகளின் உணர்வுகளோடு பிரதமர் மோடியே நீங்கள் விளையாடாதீர்கள். அவர்கள் அரசை கவிழ்க்கக்கூடிய சக்தி படைத்தவர்கள். விவசாயிகள் கஷ்டப்படும் போதெல்லாம் அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளன என வரலாறு கூறுகிறது. பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் பியூஷ்கோயலை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் மற்ற மாநிலங்களில் கொள்முதல் செய்வது போல் தெலங்கானாவிலும் நெல் கொள்முதல் செய்யுங்கள். நெல் கொள்முதலுக்கான உங்களது பதிலுக்காக 24 மணி நேரம் காத்திருப்போம். அதன் பின் ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டத்துக்கு அழைப்பு விடுப்போம். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் கிடையாது’ என்றார்.

Related Stories: