பைடன் பதவியேற்ற பிறகு முதல் 2+2 இந்தியா-அமெரிக்கா நாளை பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் பங்கேற்பு

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையிலான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை, வாஷிங்டனில் நாளை நடக்கிறது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 14ம் தேதி வரை அமெரிக்காவில் 4 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினை பென்டகனில்  தனியாக சந்தித்து பேசும் அவர், பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு, அமெரிக்க இந்திய ராணுவ செயல்பாடுகள் வாயிலாக திறனை கட்டமைப்பது குறித்து விவாதிப்பார். வாஷிங்டன் பயணத்தை முடித்து கொண்டு ஹவாய் இந்தோ- பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்க படைகள் தலைமையகத்துக்கும் அவர் செல்வார்,’ என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் 11, 12 ஆகிய 2 நாள்கள் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார். இவரும், ராஜ்நாத் சிங்கும் வாஷிங்டனில் நாளை  நடைபெறும் 4வது இந்தியா-அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர். அமெரிக்கா தரப்பில்  அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் பங்கேற்கின்றனர்.  அமெரிக்க அதிபராக பைடன் பதவி  ஏற்ற பிறகு 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடப்பது இதுவே முதல்முறை.

Related Stories: