சுகாதார கட்டமைப்பில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாமிடம்: இந்திய சுகாதார ஆணைய தலைவர் பாராட்டு

திருப்போரூர்: இந்திய பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என்ற இரு திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடு மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தென்மாநிலங் களுக்கிடையேயான ஆய்வுக்கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்திய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2018ம் ஆண்டில் இருந்து பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு குடும்பம் 5 லட்சம் ரூபாய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டம் பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டாலும் தமிழகம் 2008ம் ஆண்டில் இந்த திட்டத்தை தொடங்கி இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது. மேலும் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு கிராமங்கள் வரை உள்ளதால் அரசின் திட்டங்கள் கடைக்கோடி நபரையும் சென்றடைகிறது. சுகாதார கட்டமைப்பில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாமிடம் வகிக்கிறது. இது பெருமைக்குரிய விஷயமாகும். தற்போது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு பயனாளி குறித்த அனைத்து தகவல்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும். அவ்வாறு செய்வதன் மூலம் அவருக்கு எந்த நோய் உள்ளது, எந்த மாதிரி சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற தகவல்கள் எளிதாக எங்கிருந்தும் பெற்று விரைவுப்படுத்த முடியும்.  அதே நேரத்தில் இந்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். தமிழகம் மென்பொருள் துறையில் சிறந்து விளங்குவதால் இந்த திட்டத்தில் இணைந்து விரைவில் பயனாளிகள் தகவல்கள் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். விழாவில், இந்திய சுகாதார ஆணையத்தின் துணை ஆணையர் பிரவீன் கேதம், கூடுதல் ஆணையர் விபுல் அகர்வால், தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உமா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: