திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்தில் 19.72 லட்சம் பேர் தரிசனம்: ரூ128.64 கோடி உண்டியல் காணிக்கை.!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்தில் 19.72 லட்சம் பேர் தரிசனம் உள்ளனர்.

மொத்தம் உண்டியலில் ரூ128.64 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2002 மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் 6 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என தொடர்ந்து வந்த நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய, மாநில அரசுகள் நீக்கியது. இதனால் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு  அனுமதிக்கக் கூடிய பக்தர்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம் கடந்த ஒரு மாதங்களாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தினந்தோறும் தற்போது 60 ஆயிரம் முதல்  70 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு கடந்த மார்ச் மாதத்தில், 19.72 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை  தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கையாக ரூ.128.64 கோடி செலுத்தி உள்ளனர். 9.54 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

24.10 லட்சம் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அன்னபிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு தமிழகம், கர்நாடகா ,ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 8,028 ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் சேவை செய்து உள்ளனர் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: