அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா: 10 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்

அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செல்லீஸ்வரர் வகையறா பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. தொற்று குறைந்ததை அடுத்து இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மகிஷாசுரமர்த்தனம், கொடியேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நேற்று காலை தொடங்கியது. இதற்காக, அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள செலம்பூர் அம்மன் கோயிலில் இருந்து பத்ரகாளி அம்மனின் சகோதரி செலம்பூர் அம்மனை குதிரையில் அழைத்து வந்தனர். குண்டம் அருகே செலம்பூர் அம்மன் வந்தவுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. முதலாவதாக கோயில் தலைமை பூசாரி செந்தில் கைகளால் குண்டத்தில் உள்ள தீயை மூன்று முறை அள்ளி இறைத்து தொடங்கி வைத்தார்.அதன்பின், 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டத்தில் ஆண்கள் மற்றும் பெண் பக்தர்கள் கைக்குழந்தையுடனும், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளும் குண்டம் இறங்கியது பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது. பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.2 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தியதுடன், அம்மனை தரிசனம் செய்தது பரவசத்தை ஏற்படுத்தியது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

விழாவில் அந்தியூர், பர்கூர், அத்தாணி, பவானி, கோபி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 8ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை 4  நாட்கள் நடைபெற உள்ளது.குண்டம் திருவிழாவில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவத் துறையினர், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர் மற்றும் பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் கோயில் மிராசுதாரர்கள் செய்திருந்தனர்.

Related Stories: