மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 47 பந்தில் 70 ரன் விளாசினார். வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச முடிவு செய்தார். பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் ராஜஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 4 ரன் மட்டுமே எடுத்து டேவிட் வில்லி வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து பட்லருடன் தேவ்தத் படிக்கல் இணைந்தார்.
பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தனர். படிக்கல் 37 ரன் (29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் கோஹ்லியிடம் பிடிபட்டார். கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன் மட்டுமே எடுத்து வனிந்து ஹசரங்கா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராஜஸ்தான் 11.4 ஓவரில் 86 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.