திலீப்பின் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பார் கவுன்சிலுக்கு நடிகை மீண்டும் கடிதம்

திருவனந்தபுரம்: சாட்சிகளை மிரட்டியும், பணம் கொடுத்தும் கலைத்து ஆதாரங்களை அழிக்கும் திலீப்பின் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்ட நடிகை, எர்ணாகுளம் பார் கவுன்சிலுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வரும் 15ம் தேதிக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இதற்கிடையே இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக இருந்த நடிகர், நடிகைகள் உள்பட பலர் விசாரணையின்போது பல்டியடித்தனர். இது போலீசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில், அரசு தரப்பு சாட்சிகள் பல்டியடித்ததற்கு திலீப்பின் வக்கீல்கள் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட நடிகை, திலீப்பின் வக்கீல்களுக்கு எதிராக எர்ணாகுளம் பார் கவுன்சிலில் புகார் கொடுத்தார். அதில், திலீப்பின் வக்கீல்கள் சாட்சிகளை மிரட்டியும், பணம் கொடுத்தும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இதை பரிசீலித்த பார்கவுன்சில், வக்கீல்கள் மீது புகார் கொடுக்கும் சட்டத்தின் சில நிபந்தனைகள் கடிதத்தில் பின்பற்றப்படவில்லை’ என்று கூறி புகாரை திருப்பி அனுப்பினர். இதையடுத்து திலீப்பின் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நடிகை பார் கவுன்சிலுக்கு மீண்டும் ஒரு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், முந்தைய புகார் கடிதத்தில் இருந்த சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அனுப்பியுள்ள கடிதத்தின்படி திலீப்பின் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் கடிதம் குறித்து பரிசீலிப்பதற்காக வரும் 7ம் தேதி பார் கவுன்சில் கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட நடிகை அளித்துள்ள புகார் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: