மயாமி ஓபன் டென்னிஸ் கார்லோஸ் அல்கரஸ் முதல்முறையாக சாம்பியன்: ஜோகோவிச் சாதனை முறியடிப்பு

மயாமி: அமெரிக்காவில் 1000 மாஸ்டர்ஸ்  டென்னிஸ் போட்டியான  மயாமி ஓபன்  நடந்தது. அதில்   முதல் நிலை வீரர் ஜோகாவிச், 3ம் நிலை வீரர்  நடால்ஆகியோர் விளையாடவில்லை. ஆடிய மெத்வதேவ், ஸ்வெரவ், சிட்சிபாஸ்,  பெர்ட்டினி, நடப்பு சாம்பியன் ஹூபர்ட் என முன்னணி வீரர்களும்  தோற்று வெளியேறினர்.

இந்நிலையில்  இந்திய நேரப்படி நேற்று அதிகாலை முடிந்த இறுதி ஆட்டத்தில்  ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ்(18வயது, 16வது ரேங்க்) , நார்வே வீரர் கஸ்பர் ரூத்(23வயது, 8வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர்.ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இளம் வீரர்  கார்லோஸ் முதல் செட்டை 7-5, 2வது செட்டை 6-4 என்ற புள்ளி கணக்கில் போராடி கைப்பற்றினார். அதனால் ஒரு மணி 52நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில்  2-0 என்ற நேர் செட்களில்  கஸ்பரை வீழ்த்திய  கார்லோஸ்  முதல்முறையாக  சாம்பியன் பட்டம் வென்றார்.

கூடவே மாஸ்டர்ஸ் 1000 பிரிவு டென்னிஸ் ஆட்டத்தில்  இளம் வயதில் பட்டம் வென்ற  நோவக் ஜோகோவிச்(செர்பியா) சாதனையையும் கார்லோஸ் முறியடித்துள்ளார். ஜோகோவிச் 2007ம் ஆண்டு தனது 19வது வயதில் முதல்முறையாக மயாமி ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.

அதுமட்டுமல்ல  மயாமி ஓபன் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் வீரர் என்ற சாதனையையும் வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு  ரபேல் நடால்(5முறை) உட்பட  ஸ்பெயின் வீரர்கள் 8 முறை மயாமி இறுதி ஆட்டத்தில் விளையாடியும் சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: