அமித்ஷா மூக்கை நுழைத்ததால் அதிரடி சண்டிகரை பஞ்சாப்புடன் இணைக்க தீர்மானம்: சிறப்பு பேரவை கூட்டத்தில் நிறைவேற்றினார் மான்

சண்டிகர்: சண்டிகரை பஞ்சாப்புடன் இணைக்கும்படி வலியுறுத்தி, பஞ்சாப்  சட்டபேரவை சிறப்பு கூட்டத்தில் முதலவர் மான் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.  பஞ்சாப், அரியானா மாநிலங்களின் கூட்டு தலைநகரமாகவும், யூனியன் பிரதேசமாகவும் உள்ள சண்டிகரை, இந்த இருமாநில அரசுகளும் நிர்வாகம் செய்து வருகின்றன. இந்த அதிகாரத்தை பறிக்கும் வகையில், யூனியன் பிரதேசம் என்ற வகையில் சண்டிகரில் ஒன்றிய அரசின் பணியாளர் விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் அறிவித்தார். இதனால், பஞ்சாப் அரசு அதிர்ச்சி அடைந்தது.இந்நிலையில், சண்டிகரை பஞ்சாப்புடன் உடனடியாக இணைக்கும்படி வலியுறுத்திய முதல்வர் பகவந்த் மான், சட்டபேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டத்தை நேற்று கூட்டினார்.

இதில் அவர் தாக்கல் செய்த தீர்மானத்தில், ‘நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும், மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும், சண்டிகரை உடனடியாக பஞ்சாப் மாநிலத்துடன் இணைக்கும்படி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். கடந்த காலங்களில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தாய் மாநிலத்திலேயே தலைநகரம் இருக்கும். சமீபத்தில் ஒன்றிய அரசு இந்த நகரில் வெளி பகுதிகளை சேர்ந்த அதிகாரிகளை அதிகளவில் நியமித்தது. இது, பஞ்சாப் மறுசீரமைப்பு சட்டத்துக்கு எதிரானது.,’ என கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.கடந்த 1966ம் ஆண்டு பஞ்சாப்பில் இருந்த இந்தி பேசும் பகுதிகளை பிரித்து அரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது முதல் பஞ்சாப், அரியானாவின் கூட்டுத் தலைநகரமாக சண்டிகர் செயல்பட்டு வருகிறது.

Related Stories: