திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமல் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு 1ம் தேதி முதல் சிறப்பு தரிசன சலுகை: தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன சலுகை வரும் 1ம் தேதி முதல் மீண்டும் அமல்படுத்தப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று கணிசமாக குறைந்துவிட்டதால் பல்வேறு சேவாக்களுக்கு படிப்படியாக அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகையை மீண்டும் தொடர கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தையுடன் வரும் பெற்றோர் ஆகியோர் சிறப்பு தரிசனம் மூலம் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா பரவல் காரணமாக இந்த சலுகை கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏழுமலையானை தரிசிக்க மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கான சலுகையை மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வியாழன் வரையும், சனிக்கிழமையும் காலை 10 மணிக்கு கோயிலுக்கு தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தினந்தோறும் ஆயிரம் பக்தர்களுக்கு இந்த சிறப்பு தரிசனத்தில் அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: