துபாய் பயணம் முடிந்து, அபுதாபியில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு தமிழகத்தில் லுலு நிறுவனம் ₹3,500 கோடி முதலீடு 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு அபுதாபி சென்ற முதல்வர், முதலீட்டாளர்களுடன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, லுலு நிறுவனம் தமிழகத்தில் ₹3,500 முதலீடு மற்றும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 3 திட்டங்களை மேற்கொள்ள  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  கடந்த 28ம் தேதி மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன்படி, 3 நாள் துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு அபுதாபிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (28ம் தேதி) கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள் வருமாறு:

1) ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த அபுதாபியில் உள்ள முபாதாலா கோபுரத்தில் உள்ள எமிரேட்ஸ் பேலஸில் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்தார். அதன்படி, முபாதாலா நிறுவனத்தின் உட்கட்டமைப்பு நிர்வாக இயக்குனர் சையத் அரார்வுடனான சந்திப்பின்போது,  தமிழ்நாட்டில், மிகப் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறு இந்நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.  ஏற்கனவே, முபாதாலா நிறுவனம், பிரின்ஸ்டன் டிஜிட்டல் என்ற நிறுவனத்தின் பெயரில் 350 மில்லியன் டாலர் முதலீடுகள் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், முபாதாலா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் நிறுவனங்களுக்கிடையே ஒரு பணிக்குழுவை அமைத்து, தமிழ்நாட்டில் உள்ள பசுமை எரிசக்தி, சாலை திட்டங்கள், தொழிற் பூங்காக்கள் மற்றும் உடனடியாக துவங்கும் திட்டங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான விடுதிகள்  மற்றும் தகவல் தரவு மையங்கள் போன்ற மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுத்திடவும் முதல்வர், முபாதாலா நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.  

2) அபுதாபி வர்த்தக சபை தலைவரும், ஐக்கிய அரபு நாடுகளின் வர்த்தக சபை மற்றும் அரபு வர்த்தக கூட்டமைப்பு தலைவருமான எச்.இ.அப்துல்லா முகமது அல் மஸ்ரோயீவுடனான சந்திப்பின்போது, அபுதாபி நிறுவனங்கள் தமிழகத்தில்  உணவு பதப்படுத்துதல், உணவு பூங்காக்கள், குளிர்பதன கிடங்குகள், சரக்கு மற்றும் சேவைகள், வணிகத்தீர்வை திட்டங்கள் போன்றவற்றில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.  மேலும், தமிழ்நாட்டில் இருந்து உணவு பொருட்களை ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு/வடக்கு ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.  

ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு மேற்கொள்ள ஆர்வமுள்ள நிறுவனங்கள், குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தடையில்லா வர்த்தக மண்டலங்கள், கிடங்குகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து பூங்காக்களில் முதலீடு செய்திடலாம் என்றும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் ஓசூர் போன்ற நகரங்களில் தொழில், சேவை மற்றும் சில்லரை வணிகங்கள் போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு இவ்வாறான உள்கட்டமைப்பு தேவைகள் அதிகம் உள்ளது என்றும், எனவே, இத்துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறும், அபுதாபி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.  

3) ஏடிகியூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எச்.இ.முகம்மது அல் சுவைதிவுடனான சந்திப்பின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் மருத்துவ சுகாதார திட்டங்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற திட்டங்களில், முதலீடுகள் மேற்கொள்ளுமாறு, இந்நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.  * இந்த சந்திப்புகளை முடித்துக் கொண்டு முதல்வர், லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் யூசுப் அலியை நேற்று அவரது அபுதாபி இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  

லுலு நிறுவனம், ₹3500 கோடி முதலீடு மற்றும் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 3 திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. அதில், ₹2,500 கோடி முதலீடுகளில் 2 வணிக வளாகங்கள் மற்றும் ₹1,000 கோடி முதலீடுகளில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டம் நிறுவிட லுலு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்த சந்திப்பின்போது, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண் ராய், வழிகாட்டி நிறுவன மேலா ண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

எனக்கு கிடைத்த வரவேற்பு தமிழ்நாட்டு மக்களுக்கான பெருமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது: திரைகடலோடி திரவியம் தேடும் பண்பாட்டின் வழியே அமீரகம் சென்று நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், முதலீடுகளையும் பெற்றேன். எனக்கு கிடைத்த வரவேற்பும் அன்பும் தமிழ்நாட்டு மக்களுக்கான பெருமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: