அடகு பைக்கை மீட்க பணம் தர மறுத்த தாயை எரித்து கொன்ற மகனுக்கு 40 ஆண்டு சிறை: புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை: தாயை எரித்து கொன்ற வாலிபருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மருதாந்தலையை சேர்ந்த துரைராஜ் மனைவி லீலாவதி (56). மகன் சந்தோஷ்குமார் (26). கடந்த 2021 ஆகஸ்ட் 31ல் சந்தோஷ்குமார், அடகு வைத்திருந்த பைக்கை மீட்க தாய் லீலாவதியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என்றதால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், மண்ணெண்ணெய்யை தாய் லீலாவதி மீது ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார்.

தீயில் கருகி அலறியவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லீலாவதி இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிந்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கை புதுக்கோட்டை அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் விசாரித்து சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், சந்தோஷ்குமார் 40 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறையில் இருக்க வேண்டும். தண்டனையை குறைக்கவோ அல்லது விடுவிக்கவோ கூடாது. சந்தோஷ்குமார் செய்த தவறை எண்ணி வருந்துவதற்காக மூன்று மாதம் தனிமை சிறையில் வைக்க வேண்டும். இந்த தனிமை சிறையை 18 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: