என்ஆர் காங்கிரசுடன் கூட்டணியில் விரிசல் புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டி: மாநில தலைவர் அறிவிப்பு

புதுச்சேரி:  புதுச்சேரியில்  விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் மாநில தலைவர் அறிவித்துள்ளார். இதனால் என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில்  என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக மற்றும் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் வாரிய தலைவர் பதவிகளை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றனர். இதற்கு முதல்வர் ரங்கசாமி மறுப்பு தெரிவிக்கவே, பாஜக  விடாப்பிடியாக அவரை துரத்தி வருகிறது. அவர் பிடிகொடுக்காமல்  நழுவிக்கொண்டிருப்பதால் பாஜ மேலிடத்தில் சரமாரி புகார்களை பாஜக, சுயேச்சை  எம்எல்ஏக்கள் அளித்து வருகின்றனர். தங்களை ரங்கசாமி மதிப்பதில்லை, தொகுதியில் நலத்திட்டப்பணிகள் புறக்கணிக்கப்படுவதாக ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தனர்.

 கடந்த 24ம் தேதி புதுச்சேரியில்  நடந்த தேசிய மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக அமைப்பு  செயலாளர் சந்தோஷிடம் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் முதல்வர் ரங்கசாமி குறித்து  பல்வேறு புகார்களை அடுக்கினர்.இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர், நியமன  எம்எல்ஏக்கள் 3 பேர், ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேர் என 12  எம்எல்ஏக்கள் தங்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை பாஜக மேலிடத்திற்கு  எழுத்துப்பூர்வமாக கடிதம் மூலம் கொடுத்துள்ளனர். இதையடுத்து மேலிட பொறுப்பாளரான  நிர்மல்குமார் சுரானா உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட  உள்ளதாகவும், அதற்காக நிர்வாகிகள் தயாராக வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கூறுகையில், உள்ளாட்சி  தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவது உறுதி. ஆனால் ரங்கசாமியுடனான  கூட்டணி தொடரும் என குழப்பமான பதிலை தெரிவித்துள்ளார்.

Related Stories: