அலாரம் வைத்து பிடித்த மக்கள் ஒரே கோயிலில் 4வது முறையாக திருட வந்த ஆசாமி அதிரடி கைது-சாமி சிலைகள் பறிமுதல்

மேலூர் : மேலூர் யூனியன் அலுவலகம் எதிரே முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பாதுகாப்பு அறையில் வெண்கலத்தால் ஆன முருகன், வள்ளி உள்ளிட்ட சாமி சிலைகள், பூஜைக்கு தேவையான குத்துவிளக்கு, சூட தட்டு, கோயில் மணி உட்பட 150 கிலோ பித்தளை பொருட்கள் இருந்தன. இதில் இருந்து அவ்வப்போது பொருட்கள் திருடு போனது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாமி சிலைகளும் திருடு போனது. இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் மேலூர் போலீசில் ஏற்கனவே 2 முறை புகார் அளித்துள்ளனர். போலீசார் அறிவுறுத்தலின்படி கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, அலாரம் செட் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று பகலில் சுவர் ஏறி குதித்த மர்மநபர் ஒருவர் முதலில் சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு, உள்ளே இறங்கினார். இதையடுத்து அலரம் அடித்துள்ளது. இதனால் எச்சரிக்கையடைந்த மக்கள் மர்ம நபரை தேட துவங்கினர். அங்கு பதுங்கியிருந்த நபரை பிடித்து கட்டி வைத்து போலீசுக்கு தகவல் அளித்தனர். மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்து விசாரித்தார்.

இதில், அந்த நபர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த சாமியப்பன் மகன் பொன்னுச்சாமி(62) என தெரிய வந்தது. இவர் ஏற்கனவே இக்கோயிலில் 3 முறை திருடியதும், தற்போது 4வது முறையாக திருடிய போது பிடிபட்டதும் தெரிய வந்தது.அவரிடமிருந்து 2 அடி முருகன் சிலை, ஒன்றரை அடி வள்ளி சிலை கைப்பற்றப்பட்டது. மேலும் திருடு போன பொருட்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: