10 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்பக்கோரி மக்களவையில் டிஆர்எஸ் எம்பி.க்கள் வெளிநடப்பு

புதுடெல்லி: வேலை கிடைக்காமல் இளைஞர்கள் தற்கொலை செய்கின்றனர். இதை தடுக்க 10 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப கோரி மக்களவையில் டிஆர்எஸ் எம்பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவை நேற்று கூடியதும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) கட்சி எம்பி நம நாகேஸ்வர ராவ் தலைமையில், அக்கட்சி உறுப்பினர்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து  நாட்டில் நிலவும் வேலையில்லா பிரச்னை குறித்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கைகளில் பதாகைகள் வைத்திருந்த அவர்கள், ‘வேலையில்லாத பிரச்னையால் இளைஞர்கள் தற்கொலை செய்கின்றனர். இதை தடுக்க வேலை இல்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசு துறையில் காலியாக உள்ள 10 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கோஷம் எழுப்பினர். ஆனால், கேள்வி நேரத்தில் அவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்து விட்டார். இதையடுத்து, டிஆர்எஸ் எம்பி.க்கள் 9 பேரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

* டெல்லி போலீசார் தாக்கினர்: கேரள எம்பி.க்கள் குற்றச்சாட்டு

கேரள தலைநகர் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை 529 கிமீ துாரத்துக்கு அதிவேக ரயிலை இயக்குவதற்கான கே.ரயில் திட்டத்தை கேரள அரசு நிறைவேற்ற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்பி.க்கள் டெல்லி விஜய் சவுக்கில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலம் சென்றனர். அப்போது அவர்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த பிரச்னையை மக்களவையில் நேற்று எழுப்பிய காங். உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ், ‘‘பெண் எம்பி உட்பட 12 பேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டோம். நாங்கள் எம்பி.க்கள் என்று சொல்லியும் போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை. கோஷம் போட எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறினோம். அதை ஏற்காத போலீசார் எங்களை தாக்கினர். சிலரை கீழே  தள்ளினர்,’’ என்றார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார்.

Related Stories: