கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா : உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் உடல் முழுவதும் சேறுபூசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் குதிரை, யானை, காமதேனு, ரிஷபம், போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாையொட்டி தினமும் பொதுமக்களுக்கு சுண்டல் மற்றும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

விழா முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கோயில் முன்பு ஏராளமான பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று நள்ளிரவு முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலில் உருண்டு கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து பக்தர்கள் பலர் தங்களது உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு, கையில் வேப்பிலையுடன் கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழகத்தில் வேறு எங்கும் இந்த நேர்த்திக் கடன் இல்லை என்றும், இதனை செய்வதன் மூலம் உடலில் உள்ள சரும நோய்கள் குணமாகும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேலும் ஏராளமான பக்தர்கள் அக்கினிச்சட்டி, பூப்பெட்டி பால்குடம், 101 சட்டி, 51 சட்டி, நாக்கில் வேல் குத்துதல் மற்றும் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். சென்னை, காரைக்குடி, என தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் திருவிழாவை காண ஏராளமானோர் வந்துள்ளனர். விழாவை முன்னிட்டு, தினமும் இரவு முத்துமாரியம்மன் கோயில் திடல் முன்பு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. விழா ஏற்பாடுகளை க்ஷத்திரிய நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: