திருப்பூர்: குடும்ப பிரச்னையால் மனைவியை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு, விவசாயி விஷமாத்திரை தின்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் டிகேடி மில் பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). இவரது மனைவி சந்தியா (41). இவர்களுக்கு சிவநேத்ரா என்ற 15 வயது மகள் உள்ளார். செந்தில்குமார், உடுமலையில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். நேற்று செந்தில்குமார், தோட்டத்துக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார்.
ஒரு அறையில் சிவநேத்ரா தூங்கி கொண்டிருந்தார். மற்றொரு அறையில் இருந்த சந்தியாவுடன் இரவு சுமார் 11 மணி அளவில் செந்தில்குமாருக்கு குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செந்தில்குமார், அரிவாளை எடுத்து, சந்தியாவை சரமாரி வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர் தென்னை மரத்துக்கு வைக்கும் மாத்திரையை தின்றுவிட்டு செந்தில்குமார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையில், தனது குடும்ப செல்போன் வாட்ஸ் அப் குரூப்பில், மனைவியை கொன்றுவிட்டு தானும் விஷமாத்திரை தின்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக மெசேஜ் பதிவிட்டிருந்தார். அதை இன்று (புதன்) காலை அவரது உறவினர்கள் பார்த்துள்ளனர். தகவலறிந்து செந்தில்குமார் வீட்டின் முன் அவரது உறவினர்கள் திரண்டனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது இருவரும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசா வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
