அரிமளம் அடுத்த ஏம்பல் அருகே மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது-புதிய தார்சாலை அமைத்து கொடுத்ததால் மகிழ்ச்சி

திருமயம் : அரிமளம் அருகே மாவட்டத்தின் கடை கோடி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற காரணமாக இருந்த தினகரன் நாளிதழ் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த ஏம்பல் அருகே உள்ள கரம்பவயல், இச்சிக்கோட்டை கிராமங்கள் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது.

இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இங்கு போதுமான சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் காலம் காலமாக அத்தியாவசிய தேவைகளை பெருவதில் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். அதே சமயம் கரம்பவயல், இச்சிக்கோட்டை கிராமங்கள் புதுக்கோட்டை கிராமங்கள் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருப்பதால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டையும் அப்பகுதி மக்கள் முன்வைத்தனர்.

இதுபற்றி அப்பகுதி மக்களிடம் கேட்ட போது மித்திராவயல் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் இச்சிக்கோட்டை சாலையை கரம்பவயல் வழியாக விரிவுபடுத்தி ஏம்பலில் இருந்து தேவகோட்டை செல்லும் சாலையில் இணைப்பதன் மூலம் எங்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புள்ளது. இதனால் எங்கள் கிராம மக்கள் ஏம்பல், தேவகோட்டை உள்ளிட்ட வணிகம் வளாகம் நிறைந்த ஊர்களுக்கு விரைந்து செல்வதோடு, அச்சத்துடன் பள்ளி செல்லும் மாணவர்கள் பயனடைவர் என தெரிவித்தனர்.

இவர்களது கோரிக்கை தினகரன் நாளிதழில் செய்தி படத்துடன் வெளியானது. இதனை அறிந்த அப்போதைய கலெக்டர் உமா மகேஷ்வரி உடனே சம்பந்தப்பட்ட சாலை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து ஊராட்சி சாலையை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க பறிந்துரை செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த சாலை பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதனிடையே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற காரணமாக இருந்து தினகரன் நாளிதழ், கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: