ராகு - கேது பெயர்ச்சி திருநாகேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதசாமி கோயில் உள்ளது. பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் 1½ வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம்பெயரும் ராகு பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இங்கு நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் ராகுபகவான் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். ராகுபெயர்ச்சியை முன்னிட்டு பிற்பகல் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. ராகு கேது பெயர்ச்சியையொட்டி காலை முதலே நாகநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் திரண்டனர். நீண்ட  வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ராகு பெயர்ச்சியை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக வருகிற 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 26ம்தேதி மாலை 6 மணி அளவில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: