61 நாள் தடைகாலம் நிறைவு; நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுகையில் 2,415 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன: மீனவர்கள் உற்சாகம்

நாகை: தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததையொட்டி நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மீனவர்கள் இன்று அதிகாலை உற்சாகமாக கடலுக்கு சென்றனர்.

தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள 14 கடற்கரை மாவட்டங்களில் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 1 லட்சம் மீனவர்கள் ஓய்வில் இருந்து வந்தனர். இதேபோல் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 5 லட்சம் பேர் வேலையிழந்தனர்.

தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொழில் பாதிப்பு காரணமாக கடந்த 2 மாதங்களாக மீன் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மீன்களின் விலையும் உயர்ந்தது. மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.8ஆயிரம் வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மீன்பிடி தடை காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி 2 நாட்களாக கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தமாகினர். படகுகளில் ஐஸ் கட்டிகள், டீசல், உணவுப் பொருட்கள், குடிநீர், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றினர். இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளித்து அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை சார்பில் டோக்கன், மானிய டீசல் நேற்றிரவு வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவு மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, காரைக்கால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர் உள்பட 14 மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைபடகுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார், செருதூர், நாகூர், வேதாரண்யம், உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து 768 விசைப்படகுகள் நள்ளிரவு கடலுக்கு சென்றன. 5 ஆயிரம் மீனவர்கள் படகுகளுக்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி கடல் அன்னையை வணங்கி மீன்பிடிக்க புறப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், தரங்கம்பாடி, பழையாறு, வானகிரி உள்பட 18க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 600 விசைபடகுகளில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், பொன்னகரம், புதுகுடி, அய்யம்பட்டினம், பாலகுடி உள்பட 32 மீனவ கிராமங்களில் 550 விசைபடகுகள், தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 147 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று 300 க்கும் மேற்பட்ட பெரிய படகுகள், 50க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் என மொத்தம் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். டெல்டா மாவட்டங்களில் மட்டும் 2,415 படகுகளில் சுமார் 17ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கடந்த 2 மாதங்களாக வருவாயின்றி தவித்து வந்த மீனவர்கள் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் நாளை அதிகாலை முதல் கரை திரும்புவார்கள். இதனால் இனி மீன்கள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 61 நாள் தடைகாலம் நிறைவு; நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுகையில் 2,415 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன: மீனவர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: