கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டு : பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை! : அமைச்சர் மா.சுப்ரமணியன் பெருமிதம்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 15.06.2023 அன்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் சென்னை, கிண்டி கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.240.54 கோடியில் கட்டிடம் மற்றும் ரூ.146.52 கோடி மதிப்பீட்டில் அதிநவீன உபகரண வசதியுடன் 6 இலட்சம் சதுர அடியில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை படைத்துள்ளது.

“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்”

-எனும் திருக்குறளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உரை

“ஆகா! இவனைப்பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு“ என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும் எனும் குறள் மற்றும் பொருளுக்கு ஏற்ப நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் என்றால், அவருடைய மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் 07.05.2021 அன்று அமைக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவத்தையும், கல்வியையும் தன் இரு கண்களாக பாவித்து பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மருத்துவத்துறையின் பல்வேறு சாதனைகளில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையின் ஓர் ஆண்டு சாதனையை விளக்கும் அறிக்கை:-

கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் உள்ள உயர்சிறப்பு மருத்துவத்துறைகள்: இருதயவியல் மருத்துவத் துறை, இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைத்துறை. நரம்பியல் மருத்துவத் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை, புற்று நோய் மருத்துவப்பிரிவு, புற்று நோய் அறுவை சிகிச்சைப்பிரிவு, இரைப்பை குடல் நோய் மருத்துவம், இரைப்பை குடல் நோய் அறுவைச்சிகிச்சைத்துறை, சிறுநீரக மருத்துவம், சிறுநீரக அறுவை சிகிச்சை,இரத்தநாள அறுவை சிகிச்சை, நுண்துளை மூளை இரத்தநாள கதிரியல் பிரிவு ஆகிய துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இம்மருத்துவமனையில் சிறப்பு மருத்துவத்துறை பிரிவுகளாக அவசர சிகிச்சை, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, மைய ஆய்வகம், இரத்த வங்கி, கதிரியிக்கவியர் பிரிவு(CT.MRI. ULTRASOUND SCAN DIGITAL XRAY), இயன் முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வு போன்ற பிரிவுகள் உள்ளன.

இம்மருத்துவனையில் உள்ள உயர்சிறப்பு மருத்துவ வசதிகள் இருதய கேத்லேப், மூளை இரத்தநாள கேத்லேப், அதிதீவிர சிகிச்சை பிரிவு, 15 உயர்சிறப்பு அறுவை அரங்குகள் போன்ற மருத்துவ வசதிகள் உள்ளன.

இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட ஓர் ஆண்டு முடிவில் பயன்பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை: புறநோயாளிகள் 2,21,434, உள்நோயாளர்கள் 63,505, இதுவரை நடைபெற்ற அறுவை சிகிச்சைகள் 2,179, ஆஞ்கியோகிராம் 521, டயாலிசிஸ் 6,968, ஆய்வக பரிசோதனைகள் 7,72,558, சிடி.ஸ்கேன் 7,247, எண்டோஸ்கோப்பி 2,004, எக்ஸ்ரே 10,168, எக்கோ பரிசோதனைகள் 17,349 என்கின்ற எண்ணிக்கையில் ஓர் ஆண்டில் பயன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொடர் அறிவுறுத்தலின்படி, பல்வேறு உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவை அதிநவீன 1.5 டெஸ்லா ஆட்டோ MRI- Double Baloon Endoscopy ஆகிய வசதிகள் துவங்கப்பட்டு சிறப்பான முறையில் மருத்துவச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 04.01.2024 அன்று ரூ.6.74 கோடி செலவில் அதிநவீன இருதய கேத்லேப் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

கட்டணப்படுக்கை பிரிவு (pay ward)தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 70 தனி அறைகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த கட்டணப் படுக்கை பிரிவில் உள்ள வசதிகள்: குளிர்சாதன வசதி, வெந்நீர் உபகரணத்துடன் கூடிய தனி குளியல் மற்றும் கழிவறைகள், நவீன தீவிர சிகிச்சை பிரிவு கட்டில், அறையில் ஆக்சிஜன் மற்றும் மானிட்டர் உபகரணம், உடனிருக்கும் உறவினர் படுக்கும் சிறிய கட்டில் வசதி, செவிலியரை அழைக்கும் Nurse Call System அதாவது செவிலியர்கள் 24 மணிநேரமும் பணியில் இருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டு : பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை!

இந்த வசதிகளுடன் உள்ள தனியார் மருத்துவமனையுடன் ஒப்பிடும்போது இதன் கட்டணம் மிக குறைவாக உள்ள வகையில் கட்டணமானது Single Room ரூ.1200/-ம் Deluxe Room ரூ.2000/-ம் Super Deluxe Room – ரூ.3000/- என்று பெறப்பட்டு பொதுமக்கள் அதிநவீன சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

நவீன Modular அறுவை அரங்குகள் இந்த Modular அறுவை அரங்களானது நரம்பியல், புற்றுநோய், இருதய அறுவை சிகிச்சை, இரத்த நாள அறுவை சிகிச்சை, இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சைகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் முற்றிலும் நோய் தொற்று நீக்கப்பட்டு நோயாளர்களுக்கு நோய் கிருமி தொற்று ஏற்படா வண்ணம் Laminar Air Flow என்னும் AC குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறுவை அரங்குகளாகும். மேலும் அறுவை அரங்குகளின் சுவர்கள் நோய் கிருமிகள் படியா வண்ணம் தனித்துவமான உலோகம் மற்றும் பூச்சுகளால் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்மருத்துவமனையில் உள்ள அறுவை அரங்குகளில் பல்வேறு நவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன அறுவை அரங்கு விளக்குகள், அறுவை அரங்கு டேபிள், மயக்க மருந்து அளிக்கும் உபகரணங்கள், மானிட்டர் கருவிகள், லேப்ராஸ்கோப்பி, ஸ்கேன் கருவிகள் அடங்கும். சிறப்பம்சமாக இருதய அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் Heartlung Machine, துல்லியமான மூளை நரம்பியல், புற்றுநோய் மற்றும் கல்லீரல் செய்ய பயன்படும் CUSA (யூசா) எனப்படும் இயந்திரம், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான பிரத்யேகமான 3D Operating Microscope மற்றும் அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் HIPEC உபகரணம் கொண்டு உயர்தர நவீன அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. இந்த HIPEC அதிநவீன அறுவை சிகிச்சையானது தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 இலட்சம் செலவில் செய்யப்படுகிறது.

தற்போது தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 50 நவீன தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”

-கலைஞர் உரை

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் எனும் திருக்குறளுக்கு ஏற்ப மருத்துவத்துறையை கட்டமைத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைகளின் மூலம் பயனடைந்தோர் பல்லாயிரம் பேர் திராவிட மாடல் ஆட்சியை வாழ்த்தி நன்றி நவில்கின்றனர்,”இவ்வாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டு : பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை! : அமைச்சர் மா.சுப்ரமணியன் பெருமிதம்!! appeared first on Dinakaran.

Related Stories: