திருப்போரூர், காயார் காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை: வழக்குகளை விசாரிப்பதில் தாமதம்

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் தாழம்பூர், கேளம்பாக்கம் காவல் நிலையங்கள், சமீபத்தில் தாம்பரம் காவல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டன. தற்போது திருப்போரூர், காயார், மானாம்பதி ஆகிய காவல் நிலையங்கள் செங்கை மாவட்ட காவல் எல்லையில் உள்ளன. இந்த காவல் நிலையங்களின் மாற்றத்தின்போது, சென்னை மாநகர காவல் ஆணையரக எல்லையில் பணிபுரிய விரும்பும் போலீசாருக்கு அதற்கேற்ப இடமாற்றங்கள் செய்யப்பட்டன. இதையொட்டி, திருப்போரூர், காயார் காவல் நிலையங்களில் காவலர்களின் கணிசமாக குறைந்துள்ளது.

திருப்போரூரில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்ஐ, 4 எஸ்எஸ்.ஐ.க்கள் என 32 பேர் தேவையான இடத்தில் 6 பேர் மட்டுமே உள்ளனர். அதேபோல் காயாரில் ஒரு எஸ்ஐ, 2 போலீசார் மட்டுமே உள்ளனர். இதனால் இரவு ரோந்து பணி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவற்றை மேற்கொள்ள போலீசார் போதிய அளவில் இல்லாத நிலை உள்ளது. போதிய போலீசார் இல்லாததால் நகை பறிப்பு, கடைகளை உடைத்து கொள்ளை, வாகன திருட்டு, கஞ்சா உள்பட போதை பொருள் விற்பனையும்  அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் தண்டலத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு, இள்ளலூர் சந்திப்பில் 2 கடைகளில் கொள்ளை, நெல்லிக்குப்பத்தில் கடைகளில் கொள்ளை முயற்சி, பைக் திருட்டு ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன. இச்சம்பவங்களால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். மேலும், குடும்ப பிரச்னை, அடிதடி தகராறு உள்பட பல்வேறு பிரச்னைகளுக்காக புகார் அளிக்க செல்லும் பொதுமக்களிடம், விசாரிக்க முடியாத நிலையில்  அவர்கள், அழைக்கழிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, மாவட்ட காவல்துறை நிர்வாகம், திருப்போரூர், காயார் காவல் நிலையங்களில் கூடுதல் போலீசாரை நியமித்து, பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: