94 வயதில் பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தோல்வி..தொண்டர்கள் அதிர்ச்சி..!!

சண்டிகர்: லம்பி தொகுதியில் சிரோமணி அகாலிதள கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல் தோல்வியடைந்தார். மிக மூத்த அரசியல்வாதியும், முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் தோல்வியுற்றார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் 90 தொகுதிகளுக்கு மேல் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து அபார வெற்றியை பெற்றிருக்கிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தோல்வியை தழுவியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பிரகாஷ் சிங் பாதல் தனது 94வயதில் போட்டியிட்டார்.

இந்தியாவிலேயே அதிக வயதில் களம் காணும் ஒரே நபரும் இவர்தான். 1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி பிறந்த பிரகாஷ் சிங் பாதல், நாடு சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1970ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக முதல் முறையாக பொறுப்பேற்றபோது மிக இளம் வயதில் ஒரு மாநிலத்தின் முதல்வராக நபர் என்ற பெருமையை பெற்றார். 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்ததை சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார்.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தருவதற்காக ஒன்றிய அரசு வழங்கிய பத்மவிபூஷன் பட்டத்தை தூக்கி எறிந்தார். இதன் மூலமாக பஞ்சாப் மக்களிடம் தனது தனிப்பட்ட இமேஜை அப்படியே தக்க வைத்துக்கொண்டார். தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள தனது கட்சியினரை உற்சாகப்படுத்த 6வது முறையாக, 25 ஆண்டுகளாக தனக்கு தோல்வியே தராத லம்பி சட்டமன்ற தொகுதியில் களம் கண்டார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக லம்பி தொகுதியில் அவர் தோல்வியை தழுவினார்.

Related Stories: